ஹரியானாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”ராகுல் காந்தியை கொன்று விட்டேன், ராகுல் காந்தி மக்கள் மனதில் மட்டுமே இருக்கிறார்” என ராகுல் காந்தி கூறியுள்ளார். நான் என்னை முன்னிருத்திக்கொள்ளவில்லை, பாரத் ஜோடோ யாத்திரையைத்தான் முன்வைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
ராகுல் காந்தியின் நடைபயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) ஹரியானா மாநிலத்தில் நுழைந்துள்ளது. அவர் ஹரியானாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறும்போது, “ராகுல் காந்தி மக்கள் மனதில் மட்டும் இருக்கிறார். ராகுல் காந்தியை நான் கொன்றுவிட்டேன்” என கூறினார். மேலும், ”நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தன்னை வணங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். பாரத் ஜோடோ யாத்ரா என்பது சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் பயத்திற்கு எதிரானது. பாரத் ஜோடோ யாத்திரை சுய தியானம் பற்றியது என குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் கலகலப்பாக உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை உங்கள் பிம்பத்தை மாற்றியுள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியை நான் கொன்றுவிட்டேன்" என்று பதிலளித்தார்.
மேலும் கூறுகையில் “நீங்கள் பார்ப்பது ராகுல் காந்தியை அல்ல, இதனை புரிந்துகொள்ள ஹிந்து இலக்கியங்களும், சிவபெருமானை பற்றியும் நீங்கள் படிக்க வேண்டும், அப்போது நான் சொல்வது உங்களுக்கு புரியும்” என தெரிவித்தார்.
தனது பிம்பம் பற்றி தனக்கு கவலையில்லை எனவும் தன் வேலை மட்டுமே தனக்கு முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். அன்று தொடங்கிய பயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களை கடந்து நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் இவ்வளவு நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டதில்லை என்றும் இதுவே மிக நீண்ட நடைப்பயணம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும் யாத்திரைக்குப் பிறகு, இந்த பயணத்தின் நோக்கத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும்.