கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 146 நாள்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  


மக்களுடன் மக்களாய் ராகுல் காந்தி:


இதை தொடர்ந்து, கர்நாடக தேர்தலை முன்னிட்டு உணவை டெலிவரி செய்யும் நபருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் அம்பாலாவுக்கு லாரி டிரைவர்களுடன் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 


சமீபத்தில், டெல்லியில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடைக்கு சென்றார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.


இந்த நிலையில், சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் பஞ்சாப் பொற்கோயிலுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்ற ராகுல் காந்தி, பசியோடு வந்த பக்தர்களுக்கு உணவை பரிமாறி மகிழ்ந்தார். லங்கர் எனப்படும் பொற்கோயிலின் சமையலறையில் யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். அந்த வகையில், பக்தர்களுக்கு உணவை பரிமாறியும் பாத்திரங்களை கழுவியும் ராகுல் காந்தி சேவை செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பஞ்சாப் பொற்கோயிலில் வழிபாடு:


ராகுல் காந்தியின் பயணம் குறித்து பேசியுள்ள பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, "அமிர்தசரஸ் சாஹிப்புக்கு வந்துள்ள ராகுல் காந்தி சச்கந்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் வழிபாடு செய்து வருகிறார். இது அவரது தனிப்பட்ட, ஆன்மீக பயணம். அவரது தனியுரிமைக்கு மதிப்பளிப்போம். 


ராகுல் காந்தியை சந்திக்க கட்சி தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம். அடுத்த முறை அவரைச் சந்திக்கலாம்" என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


 






இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில், "நாடு மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தை கடந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் நடந்த வன்முறை உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியானாவிலும் மதக்கலவரங்கள் நடந்தன. நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தையே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. எனவே, மற்ற முயற்சிகளுடன் கடவுளின் தயவையும் காங்கிரஸ் நாடுகிறது" என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் பஞ்சாப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.