பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்துள்ளார்.  சிறையில் இருந்த அவருக்கு உரிய மருத்துவ  வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில்  ஸ்டேன் சுவாமி மரணமடைந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரபரப்புரையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், ஸ்டேன் சுவாமி மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 






ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், நீதி மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் ஸ்டேன் சுவாமியை அணுகியிருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


 






திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமியின் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமலே பாஜக அரசு அவரை கைது செய்தது. கோமாவிற்கு சென்று அவர் இறந்துள்ளார். போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.






ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டேன் சுவாமியின் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பழங்குடி உரிமைகளுக்காக உழைத்து தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் கைது மற்றும் சிறைவாசத்தை நான் கடுமையாக எதிர்த்தேன். அவரது  மரணத்திற்கு வழிவகுக்கும் முழுமையான அக்கறையின்மை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சேவைகளை வழங்காததற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.