முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி. இவர் மேற்கு வங்கத்தின் ஜங்கிபூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் இவர் இன்று திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 


திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்பு, “மேற்கு வங்கத்தில் பாஜகவை தடுத்து நிறுத்தியதை போல் விரைவில் நாட்டிலும் மம்தா பானர்ஜி பிற தலைவர்களின் உதவியுடன் தடுத்து நிறுத்துவார். காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் என்பதை தவிர எனக்கு வேறு எந்த பொறுப்பு தரவில்லை. ஆகவே நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சி தலைமையின் அறிவுறுத்தல் படி செயல்படுவேன் ”எனத் தெரிவித்துள்ளார். 




கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினாரான அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார். அதன்பின்னர் இவர் விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய சகோதரி ஸர்மிஸ்டா முகர்ஜி இன்னும் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து நீடிக்கிறார். 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் மகன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்வது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சி  கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 


மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் கங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய போட்டியாக எதிர்பார்க்கப்பட்ட பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலுக்கு சில பாஜக தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஜித் முகர்ஜி திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 


 






முன்னதாக கடந்த ஜூன் மாதம் மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தாது தொடர்பாக அபிஜித் பானர்ஜி ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், “மம்தா பானர்ஜி போட்டியிட்ட உள்ள பவானிபூர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது. வாய்ப்பு இருந்தால் அவர் காலியாக உள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட வேண்டும். இந்தத் தொகுதியில் இருந்து ஏற்கெனவே இரண்டு முறை என்னுடைய தந்தை வெற்றி பெற்றுள்ளார். அந்தத் தொகுதி மக்களுக்கு மாநிலத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். 


மேலும் படிக்க:  ரஃபேல் விவகாரம் மீண்டும் வெடிக்க காரணம் என்ன? தொடரும் மர்ம முடிச்சுகள்!