ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார்.
இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறி கொடுக்க, தெலுங்கு தேசம் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
தெலங்கானாவில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்குமா காங்கிரஸ்?
தெலங்கானாவை பொறுத்தவரை, கடந்த 9 ஆண்டுகளாக கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆதிக்கம்தான் தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தெலங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தெலங்கானாவில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
அதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தோல் சட்டப்பேரவை தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியை தோற்கடிப்பதே தனது முதல் இலக்கு என்றும் மத்தியில் பாஜகவை தோற்கடிப்பது இரண்டாவது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
மாஸ் காட்டிய ராகுல் காந்தி:
தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "பாஜக அரசால் என் மீது பதிவு செய்யப்பட்ட 24 வழக்குகள் எனக்கு மார்பில் குத்தப்பட்ட 24 பதக்கங்களாக கருதுகிறேன். பாஜக அரசை அம்பலப்படுத்தியதால் என் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.
காங்கிரஸ் என்ன செய்தது என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலடி அளித்த ராகுல் காந்தி, "நாட்டில் மிகவும் ஊழல் நிறைந்த அரசை கே.சி.ஆர் நடத்தி வருகிறார். கே.சி.ஆர் அவர்களே, காலேஸ்வரத்தில் எவ்வளவு பணம் திருடினீர்கள்?
தர்னி போர்டல் மூலம் சுமார் 20 லட்சம் விவசாயிகளின் நிலத்தை ஏன் பறித்து கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைத்தார். காங்கிரஸிடம் ஏதேனும் கேள்விகளை முன்வைக்கும் முன், அவர் (கே.சி.ஆர்) ஏன் தெலங்கானா மக்களுக்கு துரோகம் செய்தார். பெரும் ஊழல் மூலம் ஏன் கொள்ளையடித்தார் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
கே.சி.ஆர் ஆட்சியில் தெலங்கானாவில் 8,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். தலித் பண்டு திட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் ரூ.3 லட்சத்தை எடுத்து கொள்வது ஏன்? நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.
வெறுப்பு நாட்டை பலவீனப்படுத்துகிறது. இது அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் நாடு. வெறுப்பு மிக்க நாடு அல்ல. அதனால் தான், பாரத் ஜோடோ யாத்திரையின் போது, 'வெறுப்பின் சந்தையில், அன்பின் கடை திறக்கிறோம்' என்ற முழக்கத்தை வழங்கினேன்" என்றார்.