பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து அவர் பேசியது பேசு பொருளாக மாறியது.


லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்கினர். இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்தது. இதற்கிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது.


ராகுல் காந்திக்கு நோட்டீஸ்:


அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் அரசு அளித்த பங்களாவில் இருந்து வெளியேற ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு 30 நாள்களுக்கு பிணை வழங்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 


ஸ்தம்பித்த நாடாளுமன்றம்:


இந்த விவகாரம், தேசிய அளவில் புயலை கிளப்பியுள்ள நிலையில், கட்சி சார்பற்று ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


மூன்றாவது அணிக்கான முயற்சியை மேற்கொண்டு வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் தகுதி நீக்க விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியுள்ளனர்.


இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திலும் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் எதிரொலித்தது. ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று, கருப்பு உடை அணிந்து வந்தனர். 


இன்று நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவையும் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 


முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். 


இந்த கூட்டத்தில், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாடு, சிவ சேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.