புதுச்சேரியில்  ரேஷன் கடைகள்  திறக்கப்பட்டு  மீண்டும் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


ரேஷன் கடைகள் திறக்கப்படும் - ரங்கசாமி:


இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய போது, புதுச்சேரியில்  ரேஷன் கடைகள்  திறக்கப்பட்டு  மீண்டும் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படும்.  ரேஷன் கடை ஊழியர்களுக்கு  நிலுவையில் உள்ள 5 மாத ஊதியம் வழங்கப்படும்.  கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்களுக்கு  மீண்டும் பணி வழங்கப்படும் எனவும், ரேஷன் கடைகளில்  சிறுதானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.


புதுச்சேரி ரேஷன் கடைகள்:


புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 716 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் அரிசிக்கு பதிலாக பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அதுவும் மாதந்தோறும் சரிவர செலுத்தப்படுவது இல்லை என்கிற புகார்களும் உள்ளன. 


ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரியும், ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் ஊழியர்கள் மட்டுமின்றி தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இன்னமும் இதற்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது.


ஊழியர்கள் கோரிக்கை:


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமி கோயில் அருகே உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடைகளைத் திறக்க முடியாவிட்டால் எங்களை வேறு துறைக்கு மாற்றி விடுங்கள்" என கோரிக்கை வைத்தனர்.


 அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். அதனால் ஆவேசமடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு - திண்டிவனம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி பக்தவச்சலம், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மதியத்திற்கு மேல் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தான், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் முலம் மீண்டும் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.