காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.


இதில், பல தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.


வெடிகுண்டு மிரட்டல் : 


நடைபயணம், இந்தூரை அடைந்துள்ள நிலையில், ராகுல்காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜூனியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் மிரட்டல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார், இனிப்பு கடையில் கடிதத்தை விட்டு சென்ற நபரை தேடி வருகின்றனர். ஜூனி இந்தூர் காவல் நிலையப் பகுதியைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றனர் என தகவல் கிடைத்துள்ளது.


வரும் நவம்பர் 24 அன்று, ராகுல் காந்தி இந்தூரில் உள்ள கல்சா மைதானத்தில் இரவு ஓய்வெடுக்க உள்ளார். இது பொய்யான வெடுகுண்டு மிரட்டலாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீசார் முழு விசாரணையை தொடங்கியுள்ளனர்.


நடைபயணம் : 


காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள ஹர்திக் படேல், ஜூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ராகுல் காந்தி தற்போது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சியை ஒற்றுமைப்படுத்தலாம் என ஹர்திக் விமர்சித்துள்ளார்.


 






ராகுல் காந்தி குஜராத்தில் தேர்தல் பேரணி நடத்துவது குறித்து ஹர்திக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "காங்கிரஸ் முதலில் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும். ராகுல் காந்தி தேர்தலுக்குப் பின்னரா அல்லது தேர்தலுக்கு முன் வருவாரா என்பதுதான் கேள்வி. மக்கள் குஜராத்தில் காங்கிரஸை மகிழ்விக்க விரும்பவில்லை.


நான் காங்கிரஸில் இருந்தேன். காங்கிரஸ் எப்போதும் குஜராத்திகளை அவமதித்து வருகிறது. குஜராத்தின் அடையாளம் மற்றும் பெருமை குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்பதை நான் அறிவேன். குஜராத் மக்கள் காங்கிரசை ஒருபோதும் ஏற்கவில்லை. ஏற்கவும் மாட்டார்கள். காங்கிரஸுடன் பாஜகவை ஒப்பிடவே இல்லை. அதனுடன் சண்டையிடவும் இல்லை. நமது வளர்ச்சி மாதிரியை மேலும் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்" என்றார்.


அரசியல் தலைவர்கள் பங்கேற்பு :


கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணம், இன்னும் 2,355 கிலோமீட்டருக்கு செல்ல உள்ளது. இது அடுத்த ஆண்டு காஷ்மீரில் முடிவடைய உள்ளது.


இந்திய வரலாற்றில் மிக நீண்ட தூரத்திற்கு அரசியல் தலைவர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்ராவுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு அளித்து வருவதுடன், நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.