மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் 2022 அவதூறு வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ரூ.200 அபராதம் விதித்தது.


மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பாரத் ஜோடா யாத்திரை நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சாவர்க்கர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது.


இதையடுத்து லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பேரணியின் போது காந்தி வேண்டுமென்றே சாவர்க்கரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி, வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே புகார் அளித்தார். தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாக மனுவில் குறிப்பிடப்பட்டது.


இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கூடுதல் தலைமை நீதிபதி அலோக் வர்மா, ராகுல் காந்தியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டிசம்பர் 2024ல் கேட்டுக் கொண்டார். இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, மேலும் அவரது சட்டக் குழு தனிப்பட்ட ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.


அதில், “ராகுல்காந்தி வெளிநாட்டு பிரமுகர்களுடனான சந்திப்புகள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அவரால் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனால் கோபமடைந்த நீதிமன்றம் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்தது. அந்தத் தொகையை புகார்தாரரின் வழக்கறிஞருக்கு செலுத்துவதாகக் கூறியது. அடுத்த விசாரணை ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதே குற்றச்சாட்டில் புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.