மோடி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கியதற்கான காரணத்தை விசாரணை நீதிபதி சொல்லவில்லை எனக் கூறி, இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் இந்தியா (எதிர்க்கட்சி) கூட்டணி கட்சியினர் மத்தியிலும் இந்த உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. எனவே, இதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, தண்டனைக்கு தடை விதிப்பது அவசியமாகிறது.


ராகுல் காந்தியை சிக்க வைத்த அவதூறு வழக்கு:


கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.


ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.


தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இறுதியாக, ராகுல் காந்தி தரப்பு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, "ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் நல்ல ரசனையில் இல்லை. பொது வாழ்வில் இருப்பவர், மக்கள் முன்பு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவித்தது.


"இந்த அவதூறு வழக்கின் விசாரணையின் போது மனுதாரருக்கு (ராகுல் காந்தி) அறிவுரை வழங்கியதை தவிர, கற்றறிந்த நீதிபதியால் வேறு எந்த காரணமும் வழங்கப்படவில்லை. அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால்தான் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(3) கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கியிருந்தாலும் இந்த சட்ட பிரிவு பொருந்தி இருக்காது" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


முன்னதாக, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நீதிமன்றத்தில் பல முக்கிய வாதங்களை முன்வைத்து வாதிட்டார். நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளவும், தேர்தலில் போட்டியிடவும் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இது என்றும் தகுதி நீக்கத்தால் இரண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் வாதிடப்பட்டது. 


வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலா?


எம்.பி.யாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வமாக திரும்பபெற்று கொள்ளவில்லை என்றாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது.


நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்கிறாரா ராகுல் காந்தி?


மக்களவை செயலகம் அளித்த தகவலின்படி, வரும் திங்கள்கிழமை முதல் ராகுல் காந்தியால் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும். ஆனால், அதற்கு முன்பு, மக்களவை செயலகம் இதுகுறித்து நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மக்களவை செயலகம் தரப்பில் கூறுகையில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மக்களவையில் இருந்து அவரது தகுதி நீக்கம் செய்யப்பட்டது திரும்ப பெறப்படுவதாக நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியாகும் முன் அவரால் நாடாளுமன்றத்துக்கு வர முடியாது" என விளக்கம் தரப்பட்டுள்ளது.


இதற்கிடையே, நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதுவேன் என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "மக்களவை சபாநாயகருக்கு இன்றே கடிதம் எழுதுவேன். சத்யமேவ ஜெயதே [உண்மை வெல்லும்] நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் அனைவரின் இல்லங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இன்று ராகுல் காந்திக்கு எதிரான சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது" என்றார்.


பாஜகவுக்கு எதிராக கடும் நிலைபாட்டை எடுத்த ராகுல் காந்தி:


பாஜகவுக்கு எதிராகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராகவும் கடும் நிலைபாட்டை எடுத்துள்ள ராகுல் காந்தி, தொடர்ந்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக, பாஜகவும் அவருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை காரணம் காட்டி பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் பாஜக உறுப்பினர்கள் முடக்கினர்.


ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி பாஜக உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கு சூரத் நீதிமன்றம் திடீரென தீர்ப்பு வழங்கியது. அதன் விளைவாகவே, நாடாளுமன்ற உறுப்பினறாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.