வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. 


இந்தநிலையில், ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:


 


மல்லிகார்ஜூன கார்கே(காங்கிரஸ் தலைவர்)


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றுள்ளது, உண்மையை பேசியதற்காக பழிவாங்கப்படுகிறார் ராகுல் காந்தி. தேவைப்பட்டால் ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்வோம். 


கனிமொழி எம்.பி:


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது. 


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது முற்றிலும் தவறான நடவடிக்கை. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம் நடைபெற்றுள்ளது. இது திட்டமிட்ட அரசியல் சதி. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கை 


ஆர்.எஸ்.பாரதி:


ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ராகுலின் ஒற்றுமை நடைபயணம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மத்திய பாஜக அரசு உணர்ந்துள்ளது. ராகுல் காந்தியை 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிடலாம் என்று பாஜக திட்டமிடுகிறது. இதன் மூலம் மத்திய பாஜக அரசின் சர்வதிகார போக்கு வெளிப்படையாக தெரிகிறது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 


முத்தரசன்: 


ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்த காரணமும் தேவையில்லை. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. 


பாஜக தலைவர் அண்ணாமலை:


சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ, அதேதான் ராகுல் காந்திக்கும் பொருந்தும்.