விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. 14 கட்சிகள் சார்பிலான இந்த முறையீடு மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை:
2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, மோடி சமூகத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதேநேரம், அவருக்கு ஜாமின் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்யலாம் எனவும் வலியுறுத்தியது. முக்கிய எதிர்க்கட்சி தலைவராக கருதப்படும் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், பாஜக அரசின் செயல்பாடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
14 கட்சிகள் புகார்:
ஆலோசனையை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் திமுக, ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிரா சமிதி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. குறிப்பிட்ட கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் முறையிட்டார். அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக தலைமையிலான அரசு தவறாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவப்படுகிறது. 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95%, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது தான். அதோடு, வரைமுறையின்றி எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்கிறது. எனவே, புலனாய்வு அமைப்புகளின் விசாரணையின் போது கைதுக்கு முன்பு மற்றும் பின்பான நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதையேற்ற சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மீதான விசாரணை வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
மக்களவை முடக்கம்:
இதனிடையே, இன்று மக்களவை கூடியதுமே ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவைத்தலைவர் அமைதி காக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய பிறகும், உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவை கூடிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், ராகுல் காந்திக்கு மக்களவையில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
எம்.பி. பதவியை இழந்தாரா ராகுல் காந்தி?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எந்தவொரு எம்.பி மற்றும் எம்.எல்.ஏவும் உடனடியாக தங்களது பதவியை இழந்துவிடுவர் என, உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த வகையில் ராகுல் காந்தியும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதால், தனது எம்.பி. பதவியை இழந்துவிட்டதாக சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், மக்களவை செயலகத்தில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.