கடந்த 2019ஆம் ஆண்டு, ராகுல்காந்தி தெரிவித்த கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. தேர்தல் பரப்புரையின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம். 


இதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் காரணமாக பெரும் அரசியல் தலைவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல.


அந்த வகையில், இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள பெரும் அரசியல் தலைவர்களை பற்றி கீழே காணலாம்.


முகமது பைசல், எம்பி, லட்சத்தீவு தொகுதி: 13 ஜனவரி 2023 அன்று கொலை முயற்சி வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.


லாலு பிரசாத் யாதவ், சரண் தொகுதி: பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு எம்.பி.யாக பதவி வகித்தபோது, 2013ல் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


அசம் கான், எம்பி, ராம்பூர்: 2019 வெறுப்பு பேச்சு வழக்கில் தண்டிக்கப்பட்டவர். ராம்பூர் நீதிமன்றம், கானை குற்றவாளி என அறிவித்ததையடுத்து, அவரை தகுதி நீக்கம் செய்வதாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவை அறிவித்தது.


ஜெயலலிதா, ஸ்ரீரங்கம்: 1996ஆம் ஆண்டு, திமுக அரசு தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என ஜெயலலிதா அறிவிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்த அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்திரா காந்தி, எம்பி, ரேபரேலி: கடந்த 1975ஆம் ஆண்டு, ஜூன் 12ஆம் தேதி, நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, தேர்தல் முறைகேடுகளில் இந்திரா காந்தியைக் குற்றவாளி என்று அறிவித்தார். ரேபரேலி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டது.


காங்கிரஸ் கட்சியின் ரஷீத் மசூத், மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தபோதும் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ அப்துல்லா அசம் கானும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.


1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அதே தருணத்திலேயே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என கூறுகிறது. 


இதுகுறித்து விரிவாக பேசியுள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், "இரண்டு ஆண்டு சிறை தண்டனையால் அவரின் எம்பி பதவி தானாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அது போதாது.


அவர் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்க வேண்டும். அப்படி, குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை வாங்கினால் மட்டுமே அவரால் எம்பியாக தொடர முடியும்" என்றார்.