போலி மருந்துகளை உற்பத்தி செய்த குற்றச்சாட்டில், 18 நிறுவனங்களின் உரிமத்தை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


18 நிறுவனங்களின் உரிமம் ரத்து:


இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் நாட்டின் 20 மாநிலங்களில் உள்ள, 76 தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அதன் முடிவில் 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 70 நிறுவனங்கள், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த 45 நிறுவனங்கள் மற்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 23 நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருந்துகள் தயாரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உத்தராகண்ட் மற்றும் இமாச்சால பிரதேசத்தை சேர்ந்தவை என கூறப்படுகிறது.


ஆய்வில் சிக்கிய நிறுவனங்கள் எவை?


இமாலயா மெடிடெக்  நிறுவனத்தின் உரிமம் கடந்தாண்டு இறுதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் தயாரிக்கும் 12 மருந்துகளின் உற்பத்திக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ சாய் பாலாஜி ஃபார்மா டெக் பிரைவேட் லிமிடெட், ஈகி ஃபார்மா ஆகிய நிறுவனங்களுக்கும், நோட்டிஸ் வழங்கப்பட்டு பின்பு உரிய விளக்கம் கிடைத்தபிறகு தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏதேன்ஸ் லைஃப் சைன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டிஸ் வழங்கியதுடன், ஃபார்மா இந்தியா லிமிடெட்  நிறுவனத்திற்கு எச்சரிக்கையுடன் கூடிய நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


GNB மெடிகல் லேப் எனும் நிறுவனம் தனது மருந்துகள், மாத்திரைகள், ஊசி மூலம் செலுத்தும் மருந்துகள் மற்றும் புரோட்டின் மாவு ஆகியவற்றை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. Gnosis ஃபார்மா நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளதோடு, அழகுசாதன பொருட்களை தயாரிப்பதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள நெஸ்டர் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு, விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலி மருந்துகள் உற்பத்தி தொடர்பாக  மருந்து நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வு இன்னும் தொடர்ந்து வருகிறது.