அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


நீதிமன்றம் அதிரடி:


பிரதமர் மோடி குறித்தும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் செஷன் நீதிமன்றம்.


கோரிக்கையும், நிராகரிப்பும்:


இந்த வழக்கில் தனக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், தண்டனைக்கு தடை கோரி சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தார். அதில், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதன் தாக்கமாக விசாரணை நீதிமன்றம் தன்னை கடுமையாக நடத்தியதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.


கடந்த வாரம் அந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி.மொகேரா,  தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாக சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒரு வேளை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இன்று தடை விதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது ரத்து செய்யப்பட்டு இருந்தாலோ, மீண்டும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகி இருப்பார்.


அடுத்து என்ன செய்யப்போகிறார் ராகுல்?


சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தைதான் ராகுல் காந்தி முறைபடி நாட வேண்டியிருக்கும். ஆனால், அவர் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு சென்று கூட தனக்கு நிவாரணம் தேட வாய்ப்பிருக்கிறது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்போதெல்லாம் அரசியல்வாதிகளோ, பணம் படைத்தவர்களோ கீழமை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டால் அவர்கள்  அடுத்த கட்டமாக இருக்கும் நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு சென்றே மனு தாக்கல் செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். ராகுல் வழக்கிலும் அது நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி:


52 வயதான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், மோடி சமூகத்தை இழிபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை குற்றவாளியாக கடந்த மாதம் சூரத் மாவட்ட கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு இல்லத்தையும், அண்மையில் ராகுல் காந்தி காலி செய்தார்.