தேசிய தலைநகர் டெல்லியில் கூட்டு பாலியல் வல்லுறவு காரணமாக 9 வயது தலித் சிறுமி உயிரிழந்தார். பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் எரிக்கப்பட்டதால் மிகப்பெரிய சர்ச்சை உருவாகியது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், ஆறுதல் கூறிய புகைப்படத்தை தனது டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கியதுடன், ராகுல் காந்தியில் கணக்கை முடக்கி (லாக்) வைத்தது.






ட்விட்டரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. மீண்டும் இத்தகைய நடைமுறையை  அந்நிறுவனம் பின்பற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தது. மேலும், மாணிக்கம் தாகூர், ரன்தீப் சுர்ஜேவாலா, அஜய் மேக்கான்  உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. 






இந்தியச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் சொந்த கொள்கைகளின் படியும் ராகுல் காந்தி கணக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  


முன்னதாக, சிறுமியின் பெற்றோரின் முகங்கள் கொண்ட புகைப்படத்தைப் ராகுல் காந்தி பகிர்ந்தது, சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத் திட்டங்களுக்கு எதிரானது என தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.  






மேலும், ட்விட்டர் தளத்தில் இருந்து அந்த புகைப்படம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைதத்தது. இதனையடுயத்து, ட்விட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியது.   


   


இந்நிலையில், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்கள், தங்கள் ட்விட்டர் கணக்கில், ராகுல் காந்தி என பெயரையும் ராகுல்  போட்டோவையும் மாற்றம் செய்து வருகின்றனர்.