Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்

Rahul Gandhi: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Continues below advertisement

Rahul Gandhi: ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் இதயதுடிப்பாக மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நாயகனாகவும் திகழ்கிறார்.

Continues below advertisement

ராகுல் காந்தி பிறந்த நாள்:

 மூன்று பிரதமர்களை வழங்கியதோடு, உள்நாட்டு அரசியலின் மையமாகவும் உள்ள நேரு குடும்பத்தில் கடந்த 1970ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி ராகுல் காந்தி பிறந்தார்.  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனாகவும் அடையாளம் காணப்படுகிறார். ஆனால், இன்று தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் பெரும் வெற்றிகளையும் குவித்து வருகிறார். இந்த சூழலில் தான் இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராகுலின் இளமைப்பருவம்:

டேராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த ராகுல் காந்தி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் வளர்ச்சிப் படிப்பில் எம்.பில். முடித்தார். இது அவருக்கு உலகளாவிய கண்ணோட்டத்தை அளித்தது. தொடர்ந்து தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடும் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்று ராகுல் காந்தி முதன்முறையாக 2004ம் ஆண்டு மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

செயல்பாடுகளும், விமர்சனங்களும்:

ராகுலின் ஆரம்பகால பயணம் அவருக்கு முழுவதும் சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. அனுபவமற்றவர், உண்மையான களநிலவரத்தை அறியாதவர், வாரிசு அரசியல் மூலம் பதவி பெற்றவர் என்பன போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டார்.  துடிப்பானவராக இருந்தாலும், கோபக்காரராக இருந்ததும் தொண்டர்கள் மத்தியில் அவரால் எளிதில் சென்றடைய முடியவில்லை. இருப்பினும் காலம் அவருக்கு பக்குவத்தை கற்றுக்கொடுக்க தன்னை தானே மெல்ல மெல்ல மெருகேற்றிக் கொண்டார். 2009ம் ஆண்டு பொதுத்தேர்தல் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்தது. பல்வேறு சமூக மற்றும் அடித்தள மக்களை தொடர்பு கொண்டு, களநிலவரம் தொடர்பான உண்மையான அனுபவத்தை பெற்றார். ராகுல் காந்தியின் தீவிர பரப்புரையால் காங்கிரஸ் 2009ம் ஆண்டு மீண்டும் ஆட்சியையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் சில செயல்பாடுகளையே ராகுல் பகிரங்கமாக விமர்சித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து சறுக்கல்:

நாட்டின் பெரும் வரலாறு கொண்ட கட்சி என இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. மோடி எனும் பிரமாண்ட பிம்பத்தினை வீழ்த்த முடியவில்லை, இது ராகுல் காந்தியின் இயலாமையை காட்டுகிறது என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து 2019ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட போதும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதியிலேயே ராகுல் காந்தி வீழ்த்தப்பட்டார். இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத சூழல் ஏற்பட்டது. தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். வெறும் தொண்டராக இருந்து மீண்டும் கட்சிக்கான பணிகளை தொடங்கினார்.

ஹீரோவான ராகுல் காந்தி:

பழுக்க காய்ச்சி சம்பட்டியால் அடித்து இரும்பை பக்குவடுத்துவது போல, அடுத்தடுத்து கிடைத்த தோல்விகள் ராகுல் காந்தியை மிகவும் பக்குவமான நபராக மாற்றின.  பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற பெயரில் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கால்நடையையாய் பயணம் செய்தார்.  இளைஞர்கள், பின்தங்கியவர்கள், விவசாயிகள் போன்றோரை நேரடியாக சந்தித்து களநிலவரம் என்ன என்பதை ஆராய்ந்து அறிந்தார். மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள், எதிர்பார்க்கும் உதவிகள் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை அறிய முற்பட்டார்.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை:

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மோடியை முன்னிலைப்படுத்தியே பாஜக களம் கண்டது. அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியில்,  பிரதமர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அந்த கூட்டணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும், முகமாகவும் இருந்தவர் ராகுல் காந்தி தான் என்பது மறுக்க முடியாத உண்மை. நாடு முழுவதும் நடையாய் நடந்து தான் அறிந்த, மக்களின் வலிகளையும் அதற்கு தங்களிடம் உள்ள தீர்வுகளையும் முன்னிலைப்படுத்தியே ராகுல் காந்தி பரப்புரயை மேற்கொண்டார். அனுபவமற்றவர் என்ற முகம் மாறி, பக்குவமான தலைவராக தேர்தல் களத்தில் கர்ஜித்தார்.

அதன் விளைவாகவே வீழ்த்தவே முடியாது என மார்தட்டிக் கொண்டிருந்த பாஜக, தனிப்பெரும்பான்மையை இழந்து இன்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த இரண்டு முறையும் கிடைக்காத எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து மீண்டும் காங்கிரஸிற்கு வந்துள்ளது. இதற்கான அச்சாரம் ராகுல் காந்தி..! இந்த முறை அவர் குறிவைத்த இலக்கு நூலளவில் தப்பி இருக்காலாம். ஆனால், எதிர்காலத்தில் அவரது உழைப்பிற்கான உயர்ந்த அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதே பலரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் மகிழ்ச்சியான இன்றைய நாளை கொண்டாட, ஏபிபி நாடு சார்பாக  ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!

Continues below advertisement