Chennai Rain: சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இரவு 9.45 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இதனால் சூழல் குளிர்ச்சியாக மாற,  பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சென்னையில் கனமழை:


அதன்படி, வடபழனி, கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், மாதம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்தது. ராயபுரம், முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எண்ணூர், தண்டையார்பேட்டை,  கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், வள்ளுவர் கோட்டம், சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.


புறநகரில் வெளுத்து வாங்கிய மழை:


இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து விட்டது. ஆனாலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதேநேரம், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோர் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். சாலையோரங்களிலும், மரங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியிலும் தஞ்சமடைந்தனர். அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து மழை நின்ற பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று.


வானிலை மையம் எச்சரிக்கை:


முன்னதாக வானிலை மையம் நேற்று வெளியிட்டு இருந்த செய்திக் குறிப்பில், “சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


வெதர்மேன் சொல்வது என்ன?


தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ஒரு மணி நேரத்தில் என்னவொரு மழை. நேற்று சென்னையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்றால், இன்று மத்திய மற்றும் வடசென்னையில் வெளுத்து வாங்குகிறது. திருவொற்றியூரில் 85 மி.மீ, அமிஞ்சிகரை - 65 மி.மீ, தேனாம்பேட்டை - 62, மணலி - 60, கொளத்தூர் - 60. நாளை மீண்டும் சந்திப்போம். மிதமான மழையும் சாரலும் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார். இன்று மழை தொடர வாய்ப்புள்ளது என கூறப்படுவதால், பொதுமக்கள் அதற்கேற்றபடி தங்களது பயணங்களை வகுத்துக் கொள்வது நல்லது.