பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று தொடங்கியது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய கூட்டம் இரவு விருந்துடன் முடிவடைந்தது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர்:
இந்த நிலையில், இரண்டாவது நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது குறித்து தலைவர்களிடையே ஆலோசனை நடைபெற்று வந்தது. அதன்படி, கூட்டணிக்கு இந்தியா (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பொருள்படும் அளவுக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய இரவு விருந்து கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் பெயர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், என்ன பெயர் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி இந்தியா என்ற பெயரை இறுதி செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
கூட்டணிக்கு பதில் முன்னணி என்ற வார்த்தையை பெயரில் சேர்க்க இடதுசாரி கட்சிகள் விரும்பியதாகவும், அதேபோல கூட்டணியின் பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறுவதை தவிர்க்க சில கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக்கு தலைவர் யார்?
அதேபோல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைவராக இருந்த சோனியா காந்தி, இந்த கூட்டணிக்கும் தலைவராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கூடுதலாக, குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து இறுதி செய்வதற்கு ஒரு துணைக்குழுவும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகள், பேரணிகள், மாநாடுகளை திட்டமிட மற்றுமொரு கமிட்டியும் அமைக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாள் கூட்டத்தை தவிர்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இரண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்ட கார்கே பேசுகையில், "சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேச நலன் ஆகியவை குறித்து திட்டமிட ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்.
வெறுப்பு, பிரிவினை, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் போன்ற எதேச்சதிகார மற்றும் மக்கள் விரோத அரசியலில் இருந்து இந்திய மக்களை விடுவிக்க விரும்புகிறோம். இந்தியாவுக்காக ஒற்றுமையுடன் நிற்கிறோம்" என்றார்.