இந்தியாவில் கொரோனா பெருதொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலுடன், இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறித்து தரவுகள் உண்மையாக இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ’கொரோனா பெருதொற்றால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். ஆனால், இந்திய அரசு சொல்லும் புள்ளிவிவரமோ 4.8 லட்சம் பேர் என்று பொய்யுரைக்கிறது. அறிவியல் பொய் சொல்லாது, மோடி பொய் சொல்கிறார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மதிப்பளியுங்கள்.அவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி,இந்தியாவில் 47 லட்சம் மக்கள் இறந்திருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், இந்திய அரசு ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 வரை இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 486 என தெரிவித்தது. இதனால், கொரோனா தொற்று மரணங்கள் குறித்தி இந்தியா உண்மையா நிலவரத்தை வெளியிடவில்லை என உலக சுகாதார அமைப்பு இந்திய அரசை குற்றம் சாட்டியது.
உலக சுகாதார அமைப்பின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, அதிகப்படியான இறப்பு மதிப்பீட்டைக் கணக்கிடுவதற்கான கணித மாதிரியின் உண்மையான தரவுகளின் இருப்பைக் கருத்தில் கொண்டு அதைப் பயன்படுத்துவதற்கு தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட மாதிரிகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் உறுதித் தன்மை மற்றும் தரவு சேகரிப்பு முறை ஆகியவை கேள்விக்குரியவையாக உள்ளது என்று அது கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்