மும்பையில் கடந்த மே 4 அன்று சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 17 பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதும், அவர் மீது பல்வேறு பாலியல் குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 


மும்பையில் கடந்த மாதம் தன் குடியிருப்புப் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை ஆள் அரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று, சிறுமிக்குப் பாலியல் கொடுத்துள்ளார் ஒருவர். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மும்பையின் மிரா சாலையில் உள்ள நயா நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். 


இதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட மும்பை காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த அடையாளங்களின் உதவியோடு நயா நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில், ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வந்த நபரைக் கண்டறிந்துள்ளனர். 30 வயதான கல்பேஷ் தேவ்தரே என்ற இந்த நபர் அப்பகுதியில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். 



கல்பேஷ் தேவ்தரே


கல்பேஷ் தேவ்தரே மீது ஏற்கனவே 17 குற்ற வழக்குகள் இருப்பதாகவும், கடந்த 2021ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, பாலியல் அத்துமீறல் வழக்குகளில் இதுவரை 17 முறை கைது செய்யப்பட்டுள்ள கல்பேஷ் தேவ்தரே மீது இரண்டு ஆள் கடத்தல் வழக்குகளும் உண்டு. 


குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்பேஷ் தேவ்தரேவை விசாரித்த காவல்துறையினர், அவர் சிறுவயதில் இருந்தே அடல்ட் படங்களைக் காண தொடங்கியதாகவும், அதற்கு அடிமையாகியிருப்பதாகவும், அடல்ட் படங்களை பார்த்தவுடன் பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வழக்கம் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளனர். 


அதனைத் தொடந்து கல்பேஷ் தேவ்தரே மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கைக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 



வாகன ஓட்டுநராகப் பணியாற்றும் கல்பேஷ் தேவ்தரே தன் தாய், சகோதரர், மனைவி ஆகியோருடன் வசித்து வந்ததாகவும், தொடர்ச்சியாகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரைக் கைவிட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதி ஒன்றில் தங்கி வருகிறார் கல்பேஷ் தேவ்தரே. 


`வழக்கமாக அவரது குடும்பத்தினரும், அவரைப் பிணையில் எடுக்க வருவார்கள். தற்போது அவர்களும் இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார் காவல்துறை அதிகாரி ஒருவர். 


மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு ஆய்வாளர் அவிராஜ் குராடே, குற்றவாளி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.