நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது பேசிய எதிர்கட்சி உறுப்பினர்கள், அதானி விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியிருந்தனர்.

Continues below advertisement


இதை முன்வைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் பல குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அதானியின் வணிக சாம்ராஜ்யத்திற்கு பல்வேறு துறைகளில் பிரதமர் மோடி உதவியதாக கூறிய ராகுல் காந்தி, "அதானி எப்படி பல துறைகளில் வெற்றி பெற்றார் என்றும் பிரதமருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்றும் மக்கள் என்னிடம் ஒற்றுமை பயணத்தின்போது  கேட்டனர்.


2014 மற்றும் 2022 க்கு இடையில் அதானியின் நிகர மதிப்பு 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராக எப்படி அதிகரித்தது என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள்" என்றார்.


ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே, நடுவில் குறுக்கிட்ட மத்திய அமைச்சர்கள், பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆதாரமின்றி மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.


ராகுல் காந்தியின் கருத்துகள் தவறாகவும் இழிவாகவும் அநாகரீகமாகவும் உள்ளது என தெரிவித்துள்ள பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.


இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்கக் கோரி மக்களவை செயலாளர் ராகுல் காந்தியை கேட்டு கொண்டுள்ளார். 


முன்னதாக, இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய துபே, "ஆதாரம் இல்லாமல் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததன் மூலம் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தி ராகுல் காந்தி விதிகளை மீறியுள்ளார்.


மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமருக்கு எதிராக எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் சரிபார்க்கப்படாத, அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துகள் தவறாக வழிநடத்தும் விதமாக உள்ளது.


இழிவுபடுத்தும், அநாகரீகமான, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கக் கூடாத, கண்ணியமற்ற கருத்துகளை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது கருத்துகளை ஆதரிப்பதற்கு முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, எந்த ஆவண ஆதாரமும் இல்லாத நிலையில், சபையை தவறாக வழிநடத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தியின் நடத்தை, சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை தெளிவாக மீறுவதாகும். மேலும் அவை சபையை அவமதித்தது தெளிவாகிறது. சிறப்புரிமை மீறல் மற்றும் நாடாளுமன்றத்தை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.