காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். 


இந்த நடைபயணம், கர்நாடக மாநிலத்தை அடைந்துள்ள நிலையில், பல்வேறு கல்வி நிலையங்களின் பிரிதிநிதிகளையும் ஆசிரியர்களையும் நேற்று ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது, இந்தி தேசிய மொழியாக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "இந்தியை மட்டும் 'தேசிய மொழி' ஆக்கி, கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளின் அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை" என்றார்.


ராகுல் காந்தியின் பதில் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே, "ராகுல் காந்தியுடன் கன்னடத்தின் அடையாளம் குறித்து விவாதம் நடந்தது. அப்போது, ​​அனைவருக்கும் தாய்மொழி முக்கியம் என்றார். அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது.


எனவே, இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கி, உங்கள் மொழியின் (கன்னட) அடையாளத்தை அச்சுறுத்தும் நோக்கம் இல்லை என அவர் (ராகுல் காந்தி) தெளிவாகக் கூறினார்" என்றார்.


 






நடைபயணத்தில் கலந்து கொள்பவர்கள் குறித்து பேசிய பிரியங்க் கார்கே, "ராகுல் காந்தியுடனான உரையாடலில் பங்கேற்றவர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக நடைபயணத்தில் பங்கேற்றதாக அவர்கள் கூறினர்" என்றார்.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சி துறை தலைவர் ராஜீவ் கவுடா இதுகுறித்து கூறுகையில், "மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதில் இருந்து, கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பெரும்பாலானோர் விவாதத்தில் எழுப்பினர்" என்றார்.


விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், 150 நாட்களுக்கு 'இந்திய ஒற்றுமை' நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.


இந்த நடைபயணத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மக்களுடன் உரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 3,500 கிமீக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.