கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கூறியிருந்தார். 


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு:


ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.


இது தொடர்பாக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில், "அவதூறு வழக்கில் குற்ற தண்டனை விதித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜாமீன் நீட்டிப்பு:


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி வரை, ராகுல் காந்தியின் பிணையை நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதன் காரணமாக, 2 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதேபோல, அவதூறு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை மே 3ஆம் தேதி நடைபெறும் என சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த வழக்கின் விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகினார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் நீதிமன்றத்திற்கு சென்றனர்.


இதனால், நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ராகுல் காந்தி, நீதிமன்றத்திற்கு சென்றதை பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது. நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி நீதிமன்றம் சென்றதாக பாஜக சாடியது.


இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் குறிப்பிடுகையில், "மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய குற்றவாளி தனிப்பட்ட முறையில் செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுவாக, எந்த குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. தலைவர்கள் மற்றும் உதவியாளர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் செல்வது ஒரு நாடகம் மட்டுமே" என சாடியுள்ளார்.