"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
விளிம்புநிலை சமூக மக்கள் ஆங்கில மொழியை படித்துவிட கூடாது என்பதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அவர்களை தடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஆங்கிலம் என்பது மிகப்பெரிய ஆயுதம் என்றும் ஆனால், ஒடுக்கப்பட்ட மாணவர்களை ஆங்கிலம் படிக்க விடாமல் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் தடுப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
"ஆங்கில மொழியை படிக்க விடாமல் தடுக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்"
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதம் பற்றி எரிந்து வருகிறது. தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே கல்வி நிதி தர முடியும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மும்மொழி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பாஜக முயற்சி செய்வதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தன்னுடைய சொந்த தொகுதியான ரேபரேலியில் மூல் பாரதி விடுதியில் தலித் மாணவர்களிடையே உரையாடிய ராகுல் காந்தி, "மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) இந்தியில் பேசுங்கள் என்கிறார்.
ராகுல் காந்தி பேசியது என்ன?
ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்களின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இங்கிலாந்துக்கு சென்று படிக்கிறார்கள். அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம் ஆங்கிலம். நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டால், தமிழ்நாடு, ஜப்பான், மும்பை என எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
டாடா நிறுவனங்களில் கூட்டங்கள் இந்தியில் நடத்தப்படுவதில்லை. ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. விளிம்புநிலை சமூகங்கள் ஆங்கில மொழியை படிக்க விடாமல் தடுக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகள் நுழைவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் அதன் மீது ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளனர். ஆனால், ஆங்கிலம் உங்களின் மிகப்பெரிய ஆயுதம்" என்றார்.