அஸ்ஸாமில் காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன் மீது கிரிக்கெட் பேட்டை கொண்டு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக, அவரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக மீட்டனர். இதனால், எந்த காயமும் இன்றி அவர் தப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல்:

துப்ரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன். கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  ஹுசைன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​ரூபாஹிஹாட்டில் உள்ள நதுன் பஜாரில் மர்ம நபர்கள் கிரிக்கெட் பேட்டை கொண்டு இவரை தாக்கியுள்ளனர்.

காங்கிரஸ் எம்பி தாக்குதலுக்கு உள்ளாகும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் காங்கிரஸ் எம்பியை தாக்கிவிட்டு அவர்கள் தப்பித்து செல்வது பதிவாகியுள்ளது. முகங்களை கருப்பு துணியால் மூடி வந்த மர்ம நபர்கள், எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூட்டு எச்சரித்துள்ளார். பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள். காங்கிரஸ் எம்பியை ஏன் தாக்கினார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறிய போதிலும், பாதுகாப்பு குறைபாடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

நடந்தது என்ன?

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் அஸ்ஸாம் எதிர்க்கட்சி தலைவருமான டெபப்ரதா சைகியா கூறுகையில், "சட்டம் ஒழுங்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகிறார். ஆனால், ஒரு எம்.பி.க்கு கூட தெருவில் பாதுகாப்பு இல்லை" என்றார்.

 

இதுதொடர்பாக அசாம் டிஜிபி ஹர்மீத் சிங் கூறுகையில், "ஹுசைன் பாதுகாப்பாக உள்ளார். அவர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மீட்டனர். இருப்பினும், தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்" என்றார்.

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் துப்ரி தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரகிபுல் ஹுசைன். 

இதையும் படிக்க: RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!