பள்ளிகள் / கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டால், வருங்காலங்களில் மோசமான பின்விளைவுகளை இந்த நாடு சந்திக்கும் என்று பொருளியல் வல்லுநரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.   


கொரோனா பெருந்தொற்று நோய்த் தாக்குதல், அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. The Quint செய்தி குழுமத்தின் இணை நிறுவனர் ராகவ் பாஹ்ல் என்பவர் ஏற்பாடு செய்திருந்த நேர்காணலில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 


உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு கொண்டுவருவது மட்டும் போதாது. முழுமையான கல்வி நீரோட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். பள்ளிகள் தங்கள் செயல்பாடுகளை அதிகப்படுத்தி, இழந்த கல்வி கற்பித்தல் நாட்களை ஈடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   


டிஜிட்டல் இடைவெளி அதிகரிப்பதால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்ககள் அதிகம் பாதிப்படைகின்றனர். அத்தைகய  மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் வளங்களை அளிக்க வேண்டும். ஏற்கனவே, இவர்கள் தரம் குறைந்த கல்வி நிறுவனங்களால் மோசமான கல்வியைப் பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களில், இவர்கள் பல வருடங்கள் ( 3 அல்லது 4) பின்னோக்கி தள்ளிவிடப்பட்டுள்ளனர். இதை, நாம் முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். 






இழந்த கல்வியை மீட்கவும், இயல்பு நிலைக்கு மீண்டும் செல்லவும் விரைவாக செயல்படுவது மிகவும் அவசியம். வழக்கமான பணியாக இதை செய்யமுடியாது. மத்திய/மாநில அரசுகள் கல்வியில் முதலீடு செய்வது, நாட்டின் ஒளிமிக்க எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு ஒப்பாகும். செலவலிக்கும் இடத்தில் செலவு செய்ய வேண்டும். ஆனால், கல்வி, சுகாதாரத்துறை போன்ற துறைகளில் நமது முயற்சிகள் முட்டாள்தனமானவையாக உள்ளன என்றும் தெரிவித்தார்.  


கொரோனா பெருந்தொற்று நடத்தை முறைகள்  பின்பற்றப்பட்டு, பெருவாரியான மக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால், மூன்றாவது அலையைத் தடுக்க முடியும். ஆனால், போதிய தடுப்பூசி டோஸ்கள் கைவசம் இல்லை. இதை, மிகப்பெரிய பிரச்சனையாக கருதுகிறேன் என்று தெரிவித்தார். மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காணப்படுவதாகவும் கூறினார்.