பாலியல் உறவு:


சிறார்கள் பாலியல் உறவு கொள்வது தற்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, இருவரும் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாகவே பார்க்கப்படுகிறது.  சில சமயங்களில், சிறார்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும்பட்சத்தில், பாலியல் உறவில் ஈடுபடும் சிறாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், பிரச்னை என்னவென்றால் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் முடித்துவைக்கப்படுவதுதான்.


மேலும், சிறுமியின் பெற்றோர்/உறவினர் புகார் அளிக்கும் வழக்குகளில், முழு சம்மதத்துடனேயே குற்றம் சாட்டப்பட்டவருடன் பாலியல் உறவு கொண்டதாக சிறுமிகள் வாக்குமூலம் அளிக்கின்றனர். கடந்த 2012ஆம் ஆண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறார்கள் பாலியல் உறவுக்கு கொள்ள அனுமதிக்கும் வயது 16லிருந்து 18ஆக உயர்த்தப்பட்டது. இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் இருவர் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது.


நீதிமன்றம் பரிந்துரை:


முன்னதாக, 1940ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை, பாலுறவு சம்மத வயது 16 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இளம் வயதினர் காதல் பாலியல் உறவு கொள்ளும் வழக்குகளை கையாள சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம் என பல்வேறு உயர் நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.


போக்சோ சட்டத்தின் கீழ் பாலுறவு சம்மத வயதை தற்போதைய 18லிருந்து நாடாளுமன்றம் குறைக்க வேண்டும். வேறோர் வழக்கில், பாலுறவு சம்மத வயதை 16ஆக குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை வழங்கியது.  அதேபோல, போக்சோ சட்டம், 2012இன் கீழ் பாலுறவு சம்மத வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பினாய் விஸ்வம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்.


போக்சோ:


"இளம் பருவத்தினரிடையே ஒருமித்த உறவுகளை குற்றமாக்குவதைத் தடுக்க பாலுறவு சம்மத வயதை 18 வயதிலிருந்து 16 வயதாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலனையில் வைத்திருக்கிறதா" என பினாய் விஸ்வம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "போக்சோ சட்டம், 2012ன் கீழ் பாலுறவு சம்மத வயதை மாற்றும் திட்டம் அரசிடம் இல்லை" என்றார். 


எழுத்துப்பூர்வமாக அமைச்சர் அளித்த பதிலில், "18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை என்று சட்டம் தெளிவாக வரையறுக்கிறது. POCSO சட்டம் குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தண்டனையை வழங்குகிறது. 


குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்க குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனையை அறிமுகப்படுத்தி, 2019 ஆம் ஆண்டில் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.