கர்நாடக மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு புதிய மாநிலமாக வட கர்நாடகா உருவாக்கப்படும் என அமைச்சர் பகீர் தகவலை பகிர்ந்து உள்ளார்.
வரும் 2024 ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, இந்தியாவில் 50 மாநிலங்கள் உருவாக்கப்படும் என கர்நாடக உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "2024 தேர்தலுக்குப் பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதைப் பற்றி அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்துள்ளது.
அந்த வகையில், கர்நாடகா இரண்டாக உடைக்கப்பட்டு வட கர்நாடகா புதிய மாநிலமாக உருவாக்கப்படும். கர்நாடகாவில் இருந்து இரண்டு மாநிலங்களும், உத்தரபிரதேசத்தில் நான்கு மாநிலங்களும், மகாராஷ்டிராவில் மூன்று மாநிலங்களும் பிரிக்கப்பட வேண்டும்" என்றார்.
"மாநிலத்தை பிரிக்கும் எண்ணம் நல்லதுதான். ஏனென்றால் மக்கள் மீதான சுமை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருகி வருவதால், வட கர்நாடகமும் வளர்ச்சி காண வேண்டும் என்பதால் இதுபோன்ற சிந்தனை நல்லது. வட கர்நாடகா மாநிலமாக மாறி வளர்ச்சி அடைய வேண்டும்.
நாம் கன்னடர்களாகவே இருப்போம் ஆனால் மாநிலம் பிரிக்கப்பட்டால் எந்த பாதிப்பும் இல்லை" என உமேஷ் கட்டி தெரிவித்திருப்பதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "மக்கள் தொகை அதிகரித்து வருவதால் 50 மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்ற திட்டம் நல்லதுதான். கடந்த 60 ஆண்டுகளில், மக்கள் தொகை இரண்டிலிருந்து 6.5 கோடியாக அதிகரித்துள்ளது" என்றும் கட்டி கூறியுள்ளார்.
இதற்கு பதலளிக்கும் விதமாக பேசியுள்ள கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை, "வடக்கு கர்நாடகாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் அரசு மட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. இது குறித்து உமேஷ் கட்டி பேசுவது இது முதல் முறையல்ல. பல வருடங்களாக சொல்லி வருகிறார். இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.
இதுபற்றி கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோகா பேசுகையில், "கட்டி இவ்வாறு தொடர்ந்து கூறி வருகிறார். வட கர்நாடகாவுக்கு தனி மாநிலம் என்று அவர் பேசுவது இது முதல் முறையல்ல. இதுவரை 100 முறைக்கு மேல் சொல்லியிருக்கிறார். கர்நாடகமும் ஒன்றாகவே உள்ளது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்