உத்தரப்பிரதேசத்தில் மாமனாரும் அவரது நண்பரும் இணைந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மருமகள் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் விசித்திரமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 


அலகாபாத் உயர் நீதிமன்றம் தான் இந்த வினோத உத்தரவை பிறப்பித்துள்ளது.


புகார் என்ன?


உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபுகான் இவரது மருமகள் தான் புகார் கொடுத்தார். இந்நிலையில் தான் பாபுகான் ஒரு நாள் அவரது மருமகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். கூடவே அவரது நண்பரும் சென்றுள்ளார். வீட்டுக்குள் வந்த பாபு கான் மருமகளிடம் அவரது சகோதரரைப் பற்றி விசாரித்துள்ளார். மருமகளின் சகோதரர் இல்லை என்பதை புரிந்து கொண்ட பாபு கான் அவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். பின்னர் அவரை கட்டிலில் கிடத்தி பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். இதுதான் மருமகள் கொடுத்த புகார். 2018 மார்ச் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக அப்பெண் புகார் கூறியிருந்தார்.





நீதிபதி கருத்து:


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜித் சிங், இந்த வழக்கின் மதிப்பீடுகள் பற்றி ஏதும் ஆராயாமல் ஒரு கருத்தை கூற விரும்புகிறேன். இது மாதிரியான புகாரின் உண்மை இருக்க வாய்ப்பில்லை. இந்திய சமூகத்தில் கலாச்சாரத்தின் காரணமாக மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை. இந்த மாதிரியான புகார் போலியாகவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நபர் சமூகத்தில் பெற்றிருக்கும் மரியாதை, அந்தஸ்தை கெடுக்கும் வகையிலேயே இது கூறப்பட்டிருக்க வேண்டும். ஆகையால் பாபு கானுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்குகிறது என்றார். ஒருவேளை பாபு கானை கைது செய்தாலும் அவரை முன் ஜாமீனில் விடுவிக்கலாம் என்று நீதிபதி கூறினார்.


பாபு கான் மீது பாலியல் பலாத்காரம் (376), அதுதவிர 511, 504, 506 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஹரான்பூர் மாவட்டம் ஜனகாபுரி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பாபு கானின் வழக்கறிஞர் விசாரணையின் போது உயர் நீதிமன்றத்தால் பாபு கானின் நண்பர் முகமது ஹரூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டு பாபு கானுக்கு ஜாமீன் கோரினார்.


பாலியல் குற்றங்கள் புள்ளிவிவரம்:


ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன என்றும், அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றும் அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.