டெல்லி ஐதராபாத்தி இல்லத்தில், இந்தியா - ரஷ்யா இடையேயான 23-வது மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கூடங்குளத்தி மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷ்யா உதவி வருவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்தார்.
சந்திப்பிற்குப் பின் பிரதமர் மோடி கூறியது என்ன.?
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புதினை நண்பர் என கூறி பேச்சை தொடங்கியதுடன், இந்தியா-ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக கூறினார்.
மேலும், ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா-ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, இருதரப்பு உறவுகளுக்கு இடையே எரிசக்தித் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறினார்.
அதோடு, பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்றும், பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் அவர் கூறினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று வருவதாக மோடி கூறினார்.
மேலும், இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களை கடந்து செல்லும் நேரத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு வந்துள்ளதாக கூறிய மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தாங்கள் விவாதித்ததாக தெரிவித்தார். 2030-ம் ஆண்டு வரை இந்தியா-ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்திற்கும் தங்க ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் பேசியது என்ன.?
இதைத் தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யா, பெலாரசில் இருந்து இந்திய பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் தொடங்கப்படும் என கூறினார். புதிய சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட வழித்தடங்களை உருவாக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அணுமின் நிலைய திட்டங்கள் இந்தியாவின் தொழில்கள், வீடுகளுக்கு மலிவான, சுத்தமான மின்சாரத்தை தரும் என்றும், கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷ்யா உதவி செய்து வருவதாகவும் புதின் கூறினார். 6 அணு உலைகளில் ஏற்கனவே இரண்டில் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அணு உலையை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது இந்தியாவின் எரிசக்தி தேவைக்கான பங்களிப்பை தரும் என்றும் புதின் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு தங்கள் நாடு தொடர்ந்து கச்சா எண்ணெயை வழங்கும் என்று தெரிவித்த அதிபர் புதின், கடந்த ஆண்டு 6.20 லட்சம் கோடி ரூபாய் மிதிப்பில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்புத்துறை ஒப்பந்தம், இந்தியா-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும், இந்த ஆண்டும் இரு தரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.