கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர், கோமியம் தெளித்து தூய்மைப்படுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதை ஆட்சியை இழந்த பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டம்:
கர்நாடகாவில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாட்டு கோமியம் தெளித்து பூஜை செய்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்த பிறகு முதன்முறையாக சட்டமன்ற கூட்ட தொடர் கூடியுள்ளது.
அதற்கு முன்னதாக கட்சியின் முக்கிய பிரமுகரான மனோகர் தலைமையில், புனித நீர் தெளித்து, விதான்செளதா வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பூஜை செய்தனர். இதன் மூலம் சட்டப்பேரவையை தூய்மைப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
விமர்சனமும்.. விளக்கமும்..
காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலை பாஜக கடுமையாக சாடியுள்ளது. அதன்படி, சந்தர்ப்பவாத அரசியலாக பாஜகவை விமர்சித்துவிட்டு, தற்போது காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக விமர்சனம் செய்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் தெளிவான விளக்கம் அளித்தனர். அரசின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சட்டமன்ற வளாகத்தில் பூஜை செய்து வருவது தொண்டர்களுடைய நிலைப்பாடு மட்டுமே என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு:
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பதவியேற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டு புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். மே 24 வரை 3 நாட்கள் நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, சித்தராமையா இரண்டாவது முறையாக கர்நாடக முதலமைச்சராக கடந்த வாரம் சனிக்கிழமை பதவியேற்றார். துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடக அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே, சித்தராமையா, முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தலுக்கு முன்பு கட்சி அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமான 5 வாக்குறுதிகள்:
அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ 2,000 மாதாந்திர உதவித்தொகை, BPL குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத டிப்ளோமாதாரர்களுக்கு (இருவரும் 18-25 வயதுக்குட்பட்டவர்கள்) இரண்டாண்டுகளுக்கு ரூ.1,500 மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகிய 5 திட்டங்கள் விரைவில் அமலுக்கு வருகிறது.