இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய அந்தஸ்தை கொண்டவர் குடியரசுத் தலைவர். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக பொறுப்பு வகிப்பவர் திரௌபதி முர்மு. மாநில அமைச்சர், ஆளுநர் என்று பல உயர் பொறுப்புகளை வகித்த திரௌபதி முர்மு, பழங்குடியினத்தை சேர்ந்தவர்.


பூரி ஜெகன்னாதர் ஆலயம்:


பழங்குடியினத்தில் இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திரௌபதி முர்மு. இந்திய அரசியலமைப்பின்படி முதல் குடிமகன் என்ற மிகப்பெரும் அந்தஸ்தை கொண்ட திரௌபதி முர்மு, கடந்த 20-ம் தேதி புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.




அந்த கோயிலில் உள்ள முக்கிய சாமி சன்னதியில் வழக்கமாக சாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் உள்ளே நின்று பூஜை செய்ய, திரௌபதி முர்மு கோயில் கருவறை எனப்படும் அந்த அறைக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார். அந்த இடத்தில் நின்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை திரௌபதி முர்முவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.





மத்திய அமைச்சருக்கு அனுமதி, குடியரசுத் தலைவருக்கு மறுப்பு:


அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு முக்கிய பிரமுகர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய சென்றார். குடியரசுத் தலைவர் எந்த கருவறைக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தாரோ, அதே கருவறையின் உள்ளே அந்த முக்கிய பிரமுகர் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த முக்கிய பிரமுகரின் முதுகு மட்டுமே அந்த புகைப்படத்தில் தெரிகிறது. அந்த முக்கிய பிரமுகர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


தி தலித் வாஸ்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் " இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு அஸ்வினி வைஷ்ணவ் ( ரயில்வே அமைச்சர்) அனுமதி, திரெளபதி முர்மு ( குடியரசுத் தலைவர்) அனுமதி மறுப்பு)" என்று பதிவிட்டுள்ளனர்.


தற்போது, இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை விட உயர் அதிகாரம் பொருந்திய குடியரசுத் தலைவரை உள்ளே அனுமதிக்காத கோயில் அர்ச்சகர்களும், நிர்வாகமும் குடியரசுத் தலைவரை விட அதிகாரம் குறைந்த அஸ்வினி வைஷ்ணவை மட்டும் அனுமதித்தது ஏன்? என்றும், இது மிகப்பெரிய சாதிய பாகுபாடு என்றும் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


கடும் விமர்சனம்:


குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதாலும், பெண் என்பதாலும் குறிப்பாக கைம்பெண் என்பதாலும்தான் அனுமதிக்கப்படவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மத்திய பா.ஜ.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்,  இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் பல இடங்களிலும் சாதிய பாகுபாடு காரணமாக, முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இன்னல்களை அவ்வப்போது சந்தித்து வரும் நிலையில், தற்போது குடியரசுத் தலைவருக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Manipur Violence: டெல்லியில் முக்கிய மீட்டிங்..பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முதலமைச்சர்..மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வா?


மேலும் படிக்க: வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கி கொண்ட கார்... உள்ளே உயிருக்கு போராடும் பெண்... துணிச்சலாக செயல்பட்ட உள்ளூர்வாசிகள்..!