பக்கத்துவீட்டுக்காரருடன் ஏற்பட்ட சொந்தப் பகை காரணமாக அவரது இரண்டரை வயது குழந்தையை மண்ணில் உயிரோடு புதைத்துக் கொன்ற கொடூரம் பஞ்சாப்பில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ஷிம்லாபுரியைச் சேர்ந்தவர் நீலம். இவருக்கு வயது 35. இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு விவாகரத்து பெற்ற நிலையில் அந்தப்பகுதியில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஹர்ப்ரீத் சிங்.அதே ஊரில் காவல்துறையில் பணிபுரிகிறார்.இவருக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளார். இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் இரண்டு அண்டை வீட்டாருக்கும் இடையே இதனால் சண்டை ஏற்பட்டுள்ளது. 





இதற்கிடையேதான் அண்டை வீட்டாரின் இரண்டரை வயது மகளை அழைத்துச் சென்று அருகில் இருந்த சேலம் திப்ரி என்னும் இடத்தில் மண்ணில் புதைத்துள்ளார். குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் நீண்ட நேரம் தேடிக் கொண்டிருந்த நிலையில் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் நீலம்-ஐ அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது நீலம் தான் குழந்தையைக் கடத்திச் சென்று புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பிறகு குழந்தையை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்தக் குழந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டது.






ஆறு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றிருந்த நீலம், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் தனக்கு எதிராகச் செயல்படுவது போன்ற மனநிலையில் இருந்துள்ளார்.  இதனால்தான் அவர் ஹர்ப்ரீத் குடும்பத்துடன் விரோதம் பாராட்டியுள்ளார். இந்த நிலையில அவரது குழந்தையையும் புதைத்துக் கொன்றுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நீலம் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லூதியானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து லூதியானா காவல்துறை இணை ஆணையர் இளஞ்செழியனும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.