நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், 19 அமர்வுகள் நடைபெறும். முதல் நாளானா இன்று மூன்று வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறுகிறது. இன்றையக் கூட்டத் தொடரில், வேளாண் பொருட்களுக்காக வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டவடிவம் கொடுக்க காங்கிரஸ், திமுக,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளனர். 






அனைத்து வகையான வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேள்வி நேரத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கேட்டுள்ளார்.






 


வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வதில் தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி தெலுங்கானா எம்.பி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். 


முன்னதாக, அவைகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை  அரசு நேற்று நடத்தியது. இந்தக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்   பிரகலாத் ஜோஷி,  நாடாளுமன்ற விதிமுறைகள் அனுமதிக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக கூறினார். அவையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 


கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை  எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதோடு, நாட்டின் விவசாய பெருங்குடிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் குறித்து விரிவாக விவாதிக்கக் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசும் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.      


மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும்  மசோதா இன்று நிறைவேற்றப்பட்டவுடன், உடனடியாக மாநிலங்களையிலும் மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. எந்தவித விவாதமின்றி அவசரமாக மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. 






           


இந்தக்கூட்டத் தொடரல், 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை தொடர்பான அலுவல் ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில்  கொண்டுவரப்படும்.