பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. 


ஷ்ரத்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின.


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சமயத்தில், நான்கு பெண்கள் சேர்ந்து ஆண் ஒருவரை கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு நான்கு பெண்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரவு முழுவதும், தன்னை பாலியல் ரீதியாக தன்புறுத்தி பாலியல் உறவில் இருக்க வைத்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர், நான்கு பெண்களும் அந்த நபரை சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிடியதாகக் கூறப்படுகிறது. 


அந்த நபர் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களுக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், அவர் இதுவரை முறையான புகார் எதுவும் அளிக்கவில்லை. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட ஆண் தெரிவித்துள்ளார்.


லெதர் காம்ப்ளக்ஸ் சாலையில் காரில் வந்த நான்கு பெண்கள், தன்னை கடத்தியதாக அந்த நபர் கூறியுள்ளார். மேலும், அந்த நான்கு பெண்களும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். விலாசம் கேட்பது போல நடித்து பெண்கள் தன்னை கடத்தியதாகவும் கூறியுள்ளார்.


தனக்கு ஒரு வாசனை திரவியத்தை அவர்கள் கொடுத்ததாகவும், அது தன்னை மயக்கமடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவரை காரில் ஏற்றி கொண்டு தெரியாத இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ​​


அந்த நான்கு பெண்களுக்கும் 22 முதல் 23 வயது வரை இருக்கலாம் என அவர் கூறியுள்ளார். சுயநினைவு திரும்பியபோது ஆடையின்றி கயிற்றால் கட்டப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.


நான்கு பெண்கள் தன்னை 11 முதல் 12 மணி நேரம் பிணைக் கைதியாக வைத்திருந்ததாகவும், பின்னர் அதிகாலை 3 மணியளவில் சாலையில் விட்டுச் சென்றதாகவும் அந்த நபர் கூறினார்.


அவமானம் காரணமாக அந்த நபர் காவல்துறையை அணுகவில்லை என்றும் கூறினார். புகார் அளிக்கப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், ஆணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.