EWS Quota : பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்


கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இந்த இட ஒதுக்கீடு பாகுபாடற்றவை என்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தேசிய அளவில் 50 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அளவை இச்சட்டம் மீறவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பில் 103ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. கொண்டு வரப்பட்ட உடனேயே, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


மறு ஆய்வு மனு


இந்நிலையில், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லம் என்ற தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.






பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் கடந்த 7-ஆம் தேதி தீர்ப்பு  அளித்தனர். தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித், நீதிபதி ரவிந்தரபட் ஆகியோர் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.