பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் ஒருவர் தன்னுடைய முதல் மனைவி மற்றும் நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஆகிய இருவரையும் ஒரே பாணியில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது முதல் கொலையையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் நவ்நிந்தர்பிரிட்பால் சிங்(40). இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரரின் மகன். மேலும் இவர் கணிதம் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பதிந்தா பகுதியைச் சேர்ந்த சுபிந்தர்பால் கவுர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவருக்கும் அக்டோபர் 20ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்தச் சூழலில் கடந்த 13ஆம் தேதி திருமணத்திற்கு முன்பாக ஷாப்பிங் செய்ய சுபிந்தர்பால் கவுர் பட்டியாலா வந்துள்ளார். அப்போது தன்னுடைய பெற்றோரின் ஒப்புதலுடன் அங்கு தங்கியுள்ளார். 


அந்த சமயத்தில் அவரை கொலை செய்த நவ்நிந்தர்பிரிட்பால் தன்னுடைய படுக்கை அறைக்கு கீழே குழி தொண்டி புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன்னுடன் சண்டையிட்டு சுபிந்தர்பால் கவுர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக நாடகம் ஆடியுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அதன்பின்னர் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். 




மேலும் காவலர்கள் நடத்திய விசாரணையில் இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய முதல் மனைவியான சுக்தீப் கவுரையும் இதேபோன்று திட்டம் தீட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார். அதாவது இந்த இருவரையும் நைட்ரோஜன் வாயுவை சுவாசிக்க வைத்து கொலை செய்துள்ளார். சுக்தீப் கவுர் கர்ப்பமாக இருந்தப் போது அவரை நைட்ரோஜன் வாயுவை சுவாசிக்க வைத்து கொலை செய்துள்ளார். ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அவருடைய உறவினர்களை நம்ப வைத்து உடலை அடக்கம் செய்ய வைத்தாக அவரே தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். 


அதேபாணியில் சுபிந்தர்பால் கவுரை நைட்ரோஜன் வாயுவை சுவாசித்தால் முகத்தில் கூடுதல் பொலிவு வரும் என்று கூறி சுவாசிக்க வைத்துள்ளார். அப்போது அவர் மயங்கி உயிரிழந்த பின்பு அவரை தன் கட்டிலுக்கு கீழ் தொண்டி வைத்திருந்த குழியில் தள்ளிவிட்டு குழியை மூடி டைல்ஸ் பதித்துள்ளார். அத்துடன் இவர் திருமணம் செய்தது மற்றும் அடுத்த பெண்ணை நிச்சயம் செய்தது இவை எதுவும் அவருடைய உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியாது. அந்த விஷயங்கள் எதற்கும் தன்னுடைய குடும்பத்தை இவர் கூட்டி செல்லவே இல்லை. மேலும் 2014ஆம் ஆண்டு ஒரு பெண்ணை இவர் திருமணம் செய்து கொலை செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது. அந்தப் புகார் தொடர்பாகவும் தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க: உனக்கெல்லாம் முடி வெட்ட முடியாது.. சலூனில் தெறிக்கும் சாதி வெறி.. சேலத்தில் பரபரப்பு.!