எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என இந்த பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், டெல்லி அரசின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது.


அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வரும் எதிர்க்கட்சி மாநிலங்கள்:


கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாப் இணைந்துள்ளது. அங்கு, மாநில அரசுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.


அனுப்பப்படும் கடிதங்களுக்கு முதலமைச்சர் பகவந்த் மான்  பதிலளிக்கவில்லை என்றால், பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படும் என ஆளுநர் எச்சரித்திருப்பது புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 


முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதியுள்ள கடிதத்தில், "போதைப்பொருள்கள் கிடைப்பது குறித்தும், அதை மக்கள் பயன்படுத்தி வருவது குறித்தும், பல்வேறு அரசு அமைப்புகளிடமிருந்து அறிக்கைகள் கிடைத்துள்ளன.


பஞ்சாபை புரட்டிபோட்ட ஆளுநரின் கடிதம்:


மேலும் அவை மருந்தகங்களிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுபானக் கடைகளிலும் கிடைப்பதாகக் கூறப்படுவது" என குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபில் ஐந்தில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டிய ஆளுநர், "முந்தைய கடிதத்தில் முதலமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளேன். அரசியலமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாக குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புவேன்.


பொதுவாக, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356இன் கீழ், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாக குடியரசு தலைவருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பும்பட்சத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. இதன் மூலம், குறிப்பிட்ட மாநிலம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.


இதை கடிதத்தில் மேற்கோள் காட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "அரசியலமைப்பு தோல்வி குறித்து சட்டப்பிரிவு 356வது பிரிவின் கீழ் இந்திய குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு முன், ஐபிசியின் 124வது பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து முடிவெடுக்க உள்ளேன்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள எனது கடிதங்களின் கீழ் தேவையான தகவல்களை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். தவறினால் நான் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என குறிப்பிட்டுள்ளார்.