Cervical cancer: கர்பப்பை வாய் புற்றுறோய் மட்டுமே தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்பப்பை வாய் புற்றுநோய்:
கர்பப்பை வாய் புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட வயதிலான பெண்களுக்கு, தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே கர்பப்ப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து நடந்த இரண்டு நிகழ்வுகளால், கர்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பான பேச்சு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
கர்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?
கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரம் பெண்கள் கர்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். பொதுவாக, கர்பப்பை வாய் புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். பிந்தைய நிலைகளில், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.
கர்பப்பை வாய் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது HPV காரணமாகும். இது தொண்டை, பிறப்புறுப்பு மற்றும் தோலை பாதிக்கும். இது பொதுவாக உடலுறவு மூலம் பரவும் தொற்று ஆகும். உடலுறவில் சுறுசுறுப்பான நபர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில், அறிகுளிகளே இல்லாமல் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
யாருக்கு ஆபத்து அதிகம்?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வைரஸ் உடலில் இருந்து நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் அழிக்கப்படுகிறது. இருப்பினும், தொடர்ச்சியான தொற்று அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இது புற்றுநோயாக மாறும். அசாதாரண செல்கள் புற்றுநோயாக மாற 15-20 ஆண்டுகள் ஆகும். பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ள பெண்களில் இந்த செயல்முறை 5-10 ஆண்டுகளிலேயே முழுமடைந்து விடும். இளம் தாய்மார்கள், ஹார்மோன் கருத்தடை பயன்படுத்துபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு, கர்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.
அறிகுறிகள் & சிகிச்சைகள்:
உலக சுகாதார அமைப்பின்படி, கர்பப்பை வாய் புற்றுநோயுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- மாதவிடாய்க்கு இடையில், மாதவிடாய் நின்ற பிறகு அல்லது உடலுறவுக்குப் பிறகு அசாதாரண இரத்தப்போக்கு
- அதிகரித்த அல்லது துர்நாற்றம் கொண்ட யோனி வெளியேற்றம்
- முதுகு, கால்கள் அல்லது இடுப்பில் தொடர்ந்து வலி போன்ற அறிகுறிகள்
- எடை இழப்பு, சோர்வு மற்றும் பசியின்மை
- பிறப்புறுப்பு அசவுகரியம்
- கால்களில் வீக்கம்
கர்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை உறுதிப்படுத்த மருத்துவத் துறையின் கண்டறியும் சோதனை முக்கியமானது. சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி மற்றும் வலி மேலாண்மைக்கான இரண்டாம் நிலை சிகிச்சை ஆகியவை உள்ளன. தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் கர்பப்பை வாய் புறுநோய் மட்டுமே. செர்வாவாக் எனப்படும் நாட்டின் முதல் HPV தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.