பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று பாட்டியாலா. பாட்டியாலாவில் காவல் துறை அதிகாரி ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று அதிகாரி காரை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் செல்ல முற்பட்டது. உடனே அந்த காவல்துறை அதிகாரி காரை நிறுத்த முற்பட்டார்.


ஆனாலும், அவரை இடித்து தள்ளிவிட்டும், அவரது காலில் ஏற்றியும் அந்த கார் தப்பிச்சென்றது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அவர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, காவல்துறை அதிகாரி மீது காரை ஏற்றிச்செல்லும் பதைபதைக்கும் வீடியோவை கண்டு போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கார் ஓட்டிய நபரை உடனே கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.


 






இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக உயரதிகாரிகள் விசாரணையில் ஈடுபடத் தொடங்கினர். விசாரணையில், இந்த சம்பவம் பாட்டியாலா அருகே உள்ள லீலா பவன் சாவக் அருகே நடைபெற்றது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி பட்டியாலா ஏ.எஸ்.ஐ. என்பதும் தெரியவந்தது. அவரை அருகில் இருந்த சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் இடித்து தள்ளியதிலும், காரின் சக்கரம் ஏறியதாலும் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.




இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட டி.எஸ்.பி. ஹேமந்த் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஏ.எஸ்.ஐ. இடித்து தள்ளிய கார் பதிவெண் ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காரின் எண்ணை வைத்து ட்ரேஸ் செய்து குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என்று அவர் கூறினார். ஹரியானா மாநிலத்தின் பதிவெண்ணை கொண்ட அந்த கார் வெள்ளை நிற ஸ்விப்ட் டிசைர் ஆகும். அந்த காரின் முகப்பில் ஒரு அமைப்பின் கொடி ஒன்று கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.