பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். கூட்டுத் தலைமைக்குப் பதிலாக, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் அறிவிக்க வேண்டும் எனப் பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னியும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் ராகுல் காந்தியிடம் பகிரங்கமாக கேட்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில் மிக முக்கியமான இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சி நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வராகத் தேர்ந்தெடுக்குமா, சரஞ்சித் சிங் சன்னி மீண்டும் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பாரா என்ற கேள்வி காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்திள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த விவகாரத்தைப் பேசியுள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து, சரஞ்சித் சிங் சன்னி ஆகியோருக்கு இடையில் பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று பிரசாரக் கூட்டத்தின் போது, சரஞ்சித் சிங் சன்னி நவ்ஜோத் சிங் சித்துவைக் கட்டியணைத்து தங்களுக்கு எந்த சண்டையும் இல்லை எனத் தெளிவுப்படுத்தியுள்ளார். `பலரும் எங்களுக்குள் சண்டை இருப்பதாகக் கூறி வருகின்றன. ராகுல் காந்தி அவர்களே, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பு செய்யுங்கள். நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்’ என ராகுல் காந்தி முன்னிலையில் பிரசாரக் கூட்டத்தில் பேசியுள்ளார் பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி.
தொடர்ந்து பேசிய பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி, `பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். சித்து உங்களிடம் இது பற்றி ஏற்கனவே பேசியுள்ளார். இப்போது நானும் அதையே சொல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.