எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என இந்த பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், டெல்லி அரசின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது.


முதலமைச்சரை பகிரங்கமாக மிரட்டிய ஆளுநர்:


கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாப் இணைந்துள்ளது. அங்கு, மாநில அரசுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.


அனுப்பப்படும் கடிதங்களுக்கு முதலமைச்சர் பகவந்த் மான் பதிலளிக்கவில்லை என்றால், பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படும் என ஆளுநர் எச்சரித்திருப்பது புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியது.


இந்த நிலையில், ஆளுநருக்கு பதிலடி தந்துள்ள முதலமைச்சர் பகவந்த் மான், மாநிலத்தின் அமைதியை விரும்பும் மக்களை ஆளுநர் மிரட்டியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.


"அதிகாரப் பசியில் இருக்கிறார் பன்வாரிலால் புரோகித்"


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தப் போவதாக, அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை நேற்று ஆளுநர் மிரட்டினார்ய சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். எங்களுடைய அரசு வந்த பிறகு பல பணிகள் நடந்துள்ளன. 


ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 41 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 753 குண்டர்கள் கைது செய்யப்பட்டு 786 ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது.


ஆளுநர் எனக்கு 16 கடிதங்கள் எழுதியுள்ளார். அதில், ஒன்பது கடிதங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள கடிதங்களுக்கும் பதில் அளிக்கப்படும். என்ன அவசரம்? பஞ்சாபின் ஊரக வளர்ச்சி நிதி பற்றி ஆளுநர் எப்போதாவது கடிதம் எழுதியிருக்கிறாரா? விவசாயிகள் பிரச்னை குறித்து அவர் எப்போதாவது கேட்டது உண்டா? ஆளுநரே, நீங்கள் எப்போதாவது பஞ்சாபுடன் துணை நின்றிருக்கிறீர்களா?


அதிகாரப் பசி எல்லா எழுத்துக்களிலும் தெரிகிறது. ஆளுநர், நாக்பூரில் இருந்து வந்திருந்தாலும் அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். அங்கு தேர்தல் வரப்போகிறது. அங்கிருந்து தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆக விரும்புகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்பு நிதியை வெளியிடுவதில் சிரமம் இருக்கிறது.


பஞ்சாப் தற்போது வெள்ளத்தின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அதன் இழப்பை ஒவ்வொன்றாக ஈடுகட்ட வேண்டும். எங்களிடம் 9,600 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிதி உள்ளது. ஆனால், மத்திய அரசின் கடுமையான விதிகளால் அதை மக்களுக்கு வழங்க முடியாது" என்றார்.