பொதுவாக திருவிழாக்களின் போது அதிகமாக இருக்கும் கேளிக்கை விளையாட்டுகளில் ஒன்று ராட்டினம். பொருட்காட்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் இந்த ராட்டினத்தில் ஏறி விளையாடி மகிழ்வார்கள். அந்தவகையில் ராட்டினத்தில் ஏறி குழந்தைகள் விளையாடிய போது ராட்டினம் திடீரென்று கீழே விழுந்து விபத்திற்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில்  அமைந்துள்ள தசரா மைதானத்தில் ஒரு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பாக சுழன்று கொண்டு சுத்தும் ராட்டினம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த சுழலும் ராட்டினத்தில் பல குழந்தைகள் விளையாடி மகிழ்ந்துள்ளனர். 






இந்நிலையில் இந்த சுழலும் ராட்டினத்தில் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த போது திடீரென்று ராட்டினம் வேகமாக கீழே வந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 16 குழந்தைகள் வரை பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


இந்த விபத்தில் காயம் அடைந்த 16 குழந்தைகளும் மொஹாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த விழாவில் ராட்டினம் அமைப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அத்துடன் இந்த ராட்டினத்தின் பாதுகாப்பு தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டதா என்பது போன்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். 


நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த மைதானத்தில் பலரும் கூடியிருந்தனர். இந்த ராட்டினம் விழும் போது சுமார் 30 பேர் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அலுவலர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.




மேலும் படிக்க: டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்! ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாடுகிறார்கள்?