புனேவில் இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் ஆறு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், பலர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இடிந்து விழுந்த பாலம்:

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள குந்த்மாலா நீர்வீழ்ச்சி, மழைக்காலங்களில் அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, பாலத்தில் இருந்த சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உட்பட காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்கள் இன்னும் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்:

புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மலைப்பாங்கான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ருந்தது. இந்த சூழலில், புனே கிராமப்புறத்தின் மாவல் பகுதியில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

 

கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டமைப்பு பாதுகாப்பு குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பல சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் ஆபத்து குறித்து தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாத தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமைதான், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், டெக் ஆப் செய்த 40 வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க: விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்