ஐஐடி போன்ற இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் சிலர் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் விருதுநகர் மாவட்டச் சேர்ந்த யோகேஸ்வரியும் ஒருவர்.
ஜேஇஇ தேர்வில் வென்ற அரசுப்பள்ளி மாணவி:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி. இவர் தமிழக அரசு உயர்படிப்புகளில் சேரும் நுழைவுத்தேர்வுக்காக நடத்தப்படும் நான் முதல்வன் பயிற்சியின் கீழ் படித்து வந்தார். இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்த யோகேஸ்வரி ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் அவருக்கு புகழ்பெற்ற மும்பை ஐஐடி-யில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு அவருக்கு ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
டீக்கடைக்காரர் மகள்:
இதுதொடர்பாக, மாணவி யோகேஸ்வரி கூறியதாவது, என் பெயர் யோகேஸ்வரி. நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். இப்போது 12ம் வகுப்பு முடித்துள்ளேன். எனக்கு ஐஐடி மும்பையில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அம்மா பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நான் முதல்வன் திட்டத்தில் பங்கேற்று படிக்கச் சொன்னார். நான் அங்கு சேர்ந்தேன். பின்னர், அந்த திட்டம் குறித்து சொன்னார்கள்.
தேர்ச்சி பெற்றது எப்படி?
எந்த நுழைவுத்தேர்வு எழுதினால் எந்தெந்த கல்லூரிக்கு செல்லலாம்? எந்தெந்த உயர்கல்வி படிக்கலாம்? என்று சொன்னார்கள். அது மூலமாக எனக்கு ஜேஇஇ தேர்வுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலே விண்ணப்பித்தார்கள். விண்ணப்பித்தது மட்டுமின்றி எப்படி எழுதனும்? எப்படி எல்லாம் கேள்விகள் இருக்கும்? என்றெல்லாம் சொன்னார்கள். ஜேஇஇ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு ஈரோட்டில் ஒரு 40 நாட்கள் பயிற்சி அளித்தார்கள். அங்கயும் நான் சேர்ந்தேன். அதில் சேர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். கவுன்சிலிங்கில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் சொல்லிக் கொடுத்தார்கள்.
நான் முதல்வன் எனும் வரப்பிரசாதம்:
நெடுஞ்செழியன் சார் மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி. நான் முதல்வன் திட்டம் ஏழைக்குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
எங்களைப் போல ஏழைக்குழந்தைகளுக்கு அது ரொம்ப நல்லா இருக்குது. அதனால், முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இந்த திட்டத்தில் என்னைப் பங்கேற்க சொன்ன விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கும் நன்றி. உயர்கல்விக்கு அனைத்து செலவையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். அதற்கும் மிக்க நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
மிகவும் சாதாரண ஏழைப்பின்னணியை கொண்ட அரசுப்பள்ளி மாணவிக்கு புகழ்பெற்ற மும்பை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிட்டியதற்கு அந்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.