உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாள் இந்தியாவுக்கு கருப்பு நாளாகவே அமைந்தது. ஜம்முவில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் கான்வாய் மூலம் ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழக்கம்போல இந்த நாள் என்றும் எண்ணிக்கொண்டு சென்ற அந்த வீரர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரிவில்லை..? சரியாக இன்னும் 30 கி.மீ தூரம் சென்றால் ஸ்ரீநகர் வந்துவிடும். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கான்வாய் மீது மோதியது. அடுத்த கணம் மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது அடுத்த 10 கிலோமீட்டர் தூரம் வரை வெடிச்சத்தம் கேட்டம். சுற்றிலும் புகை அனைத்தையும் மறைத்தது. புகை மறைந்ததும் அந்த காரோ, கார் மோதிய கான்வாய் வாகனமோ சில்லு சில்லாய் சிதறி கிடந்தது. மேலும், அதனை சுற்றி, நம் இந்திய ராணுவ வீரர்களின் உடல்களும்...
புல்வாமாவில் இந்த கொடூரமான தாக்குதல் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் தாக்கம் இன்று வரை ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் மறையாத வடுவாக உள்ளது. இந்த தாக்குதல் இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கியது. வீர மரணமடைந்த வீரர்களின் கும்பங்களின் கண்ணீருக்கு பதில் அளிக்கப்படும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எப்போது, எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்தது. சரியாக 12 நாட்களுக்கு பிறகு, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகத்திற்கு இந்தியா பழிவாங்கியது. இந்திய விமானப்படை விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் உள்ள பாலகோட்டையை சுக்குநூறாக்கியது.
பிப்ரவரி 14ம் தேதி என்ன நடந்தது..?
2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகள் கொண்ட சிஆர்பிஎஃப் கான்வாயில், 2500க்கும் மேற்பட்ட வீரர்களுடன் கிளம்பியது. இந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, 3 மணியளவில் புல்வாமா வழியாக கான்வாய் சென்றபோது, பயங்கரவாதி அடில் அகமது தார் ஒரு காருடன் கான்வாயில் வேகமாக மோதியது. இந்த காரில் 100 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பொருட்களில் வீரியத்தால் கான்வாயின் பெரும்பாலான பேருந்துகளின் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு, பல வீரர்கள் காயமடைந்தனர். இதில், சிஆர்பிஎஃப் 76 பட்டாலியனின் பேருந்து கான்வாயில் இருந்த 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்தலில் மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் மௌலானா அம்மார் அல்வி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இது தவிர, முகமது இஸ்மாயில், முகமது அப்பாஸ், பிலால் அகமது, ஷாகீர் பஷீர் ஆகியோரின் பெயர்களும் வெளியிடப்பட்டது.
12 நாட்களில் பழிதீர்த்த இந்திய ராணுவம்:
இந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி இரவு, குவாலியர் விமானத் தளத்தில் இருந்து மிராஜ்-2000 விமானங்கள் புறப்பட்டு, 26 பிப்ரவரி 2019 அன்று, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை குறிவைத்தது தாக்கியது.
இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு பாலகோட் ஸ்டிரைக் என்று பெயரிடப்பட்டது.
இந்த தாக்குதலின்போதுதான் பாகிஸ்தான் எல்லைக்குள் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் அபிநந்தன் வர்தமான், 2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசு அபிநந்தன் வர்தமானுக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கி கௌரவித்தது.