புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களும் 24.05.2025, 31.05.2025 மற்றும் 07.06.2025 ஆகிய சனிக்கிழமைகளில் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரமத்தை எதிர்கொள்ளும் மாணவர்கள், பெற்றோர்கள்:
இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிக்கையில், "வருகின்ற 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதையும் படிக்க: TVK Vijay: தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?
இந்த நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களும் மாணவர்களுக்காக மட்டும் 24.05.2025, 31.05.2025 மற்றும் 07.06.2025 ஆகிய சனிக்கிழமைகளில் செயல்பட உள்ளன.
தாலுகா அலுவலகங்களுக்கு பறந்த உத்தரவு:
மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் வட்டாட்சியர் / தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களுக்கான இருக்கை, குடிநீர் போன்ற தேவையான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் நலனுக்காகவும், கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். கடந்த 16ஆம் தேதி, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. புதுச்சேரி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். கடந்த 6ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 12948 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
இதையும் படிக்க: TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?