புதுச்சேரியில் வரும் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையில் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளின் கூட்டணி அமைச்சரவை ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ்- தி.மு.க. ஆகிய பிரதான கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே இடங்கள் பங்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இதற்கென குழு அமைக்கப்பட்டு ஏற்கனவே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று அண்ணாமலை ஓட்டலில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கினார்.  இதில் என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களான தமிழக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, எம்.சி.சம்பத், செல்லூர் ராஜூ, புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தை புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் கலந்து கொள்ளாமல் திடீரென புறக்கணித்தார். காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓமலிங்கம் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்து இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. கூட்டணி கட்சிகளிடையே நடந்த இடஒதுக்கீடு தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் அ.தி.மு.க. மாநில செயலாளர் புறக்கணித்தது அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த பேச்சுவார்த்தையின் போது புதுச்சேரி நகராட்சியை பெறுவதில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே மீண்டும் போட்டி ஏற்பட்டது. புதுச்சேரி நகராட்சி தங்களுக்கு வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இந்த தொகுதியில் தங்களுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்ததை சுட்டிக்காட்டியும், இழந்த செல்வாக்கினை மீட்க வசதியாக புதுச்சேரி நகராட்சியை கேட்டது. அதோடு அங்குள்ள கவுன்சிலர் பதவிகளில் 60 சதவீத கவுன்சிலர்களையும் விட்டுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



ஆனால் முக்கிய பிரமுகர் ஒருவருக்காக பா.ஜ.க. புதுவை நகராட்சியை தங்களுக்கு தர வலியுறுத்தியது. இரு தரப்பிலும் விட்டுத்தராமல் கடும் போட்டி இருந்து வருகிறது.  உழவர்கரை நகராட்சியில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதால் அந்த நகராட்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இதேபோல் காரைக்கால் நகராட்சியையும் என்.ஆர்.காங்கிரஸ் கேட்கிறது. இதை பா.ஜ.க.வும் விட்டுத் தருமாறு கேட்டு வருகிறது.


முதல் கட்டமாக நகராட்சிகளை பெறுவதில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டதும் அடுத்தகட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளை பிரித்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க சுயேச்சை எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று பிற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதை பொறுத்து மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் மாலையில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேர்தலுக்கு தடை வராதா? என்ற எண்ணமே அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி உள்ளது.