மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெயரிலான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதின் பெயரை மேஜர் தியான் சந்த் கேல்ரத்னா விருது எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். ‘இந்தியா முழுக்க இருக்கும் மக்களிடமிருந்து கேள் ரத்னா விருதின் பெயரை மாற்றக்கோரி மிக நீண்டகாலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் அவர்களது உணர்வுகளை மதிக்கும் பொருட்டு இனி கேள்ரத்னா விருது தியான்சந்த் கேள்ரத்னா விருது எனப் பெயர்மாற்றம் செய்யப்படும். நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டுவீரர் அவர்.அவர் பெயரில் உயரிய விருது இருப்பதே பொருத்தமாக இருக்கும்’ என அறிவித்துள்ளார். 






ஆனால் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் 1991-92ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த விருதுக்குத் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.  ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருதை முதல்முதலில் சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். அவருக்கு அடுத்து லியாண்டர் பயஸ், சச்சின் டெண்டுல்கர், தன்ராஜ் பிள்ளை, புல்லெலா கோபிசந்த், அபினவ் பிந்த்ரா, அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் தற்போதைய இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் வரைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆனால் இந்தப் பெயர் மாற்றம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரிய எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இந்தப் பெயர்மாற்றத்தைக் காரசாரமாகக் கண்டித்துள்ள புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, ’ராஜீவ் காந்தி கிராமப்புற மலைவாழ் மக்களிடம் விளையாட்டை கொண்டு செல்ல நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். கிராமங்களில் இருந்து வில்வித்தை மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் தேர்ந்த விளையாட்டு வீரர்கள் நிறையபேர் உருவானார்கள். மக்களிடம் விளையாட்டை ஊக்குவித்தவர் ராஜீவ் காந்தி. அதனால்தான் அவர் பெயரில் ராஜீவ் காந்தி கேள்ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் மறைந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் பெயரால் தெருக்களுக்கும்  அரசுக்கட்டிடங்களுக்கும் பெயர் வைத்தார். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அதனை மாற்றவில்லை. அதுதான் எங்கள் நாகரிகம். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி எங்கள் தலைவர் ராஜீவ்காந்தியின் பெயரை மாற்ற என்ன அவசியம் வந்தது? இது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான அவரது வெறுப்பைக் காட்டுகிறது. இது அரசியல் நாகரிகமற்ற செயல். இதன் விளைவை விரைவில் அவர் ராகுல்காந்தியின் வழியாகச் சந்திப்பார். நாட்டின் ஒற்றுமைக்காக தன்னை தியாகம் செய்தவர் ராஜீவ்காந்தி.அவரது தியாகத்தை அவமதிக்கும் செயல் இது’ எனக் கூறியுள்ளார். 


தியான்சந்தை கௌரவிக்கும் வகையில் ஏற்கெனவே வாழ்நாள் விருது இருக்கும்போது அவர் பெயரில் மற்றொரு விருது அறிவிப்பதற்கான தேவை என்னவென்றும் கேள்வி எழுந்துள்ளது.